Thursday, November 20, 2014

மறுபடியும் மகிந்தவா.........??????


தமிழர்களிற்கு இலங்கையின் அரசியல் ஊகிப்பதற்கு மிகக்கடினம். காரணம் தமிழ் ஊடகங்கள் சிங்கள மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதை வெளிப்படுத்துவதில்லை. சிங்களவர்களின் அரசியல் பார்வை, அபிவிருத்தி பற்றிய சிந்தனை என்று எதனையும் வெளியிடுவதில்லை.

மகிந்த
இலங்கையின் சிக்கலே இதுதான். வடக்கில் 'மோட்டுச் சிங்களவன்' என்று தமிழ் ஊடகங்களும், தெற்கில் 'கள்ளத் தமிழன்' எண்டு சிங்கள ஊடகங்களும் எப்போதும் எண்ணெய் ஊற்றிக் கொண்டே இருந்தால் என்றுதான் அவர்கள் மற்றவர்களது உண்மை மனோநிலையை புரிந்து கொள்வது.

அரசியல் விவாதங்களிலும் இதே நிலவரம்தான். தமிழருக்கு சிங்களம் வாசிக்க தெரியாது. சிங்களவர்களுக்கு தமிழே தெரியாது. முஸ்லீம்கள் இந்த விவகாரத்தில் சரியாக நிலவரங்களை கணிக்ககூடியவர்கள். ஆனால் முதலே கணித்து வெல்லக்கூடிய கட்சியோடு தங்களை இணைத்துக்கொள்வதுதான் துர்பாக்கியம்.

இரண்டு தடவை வென்ற மகிந்தவிற்கு மூன்றாம் தடவை வெல்வது மிக எளிதான விவகாரம். வரலாறு காணாத ஊழல் ஒருபுறம், நினைத்துக்கூட பார்க்கமுடியாத அடக்குமுறை, அடாவடி அரசியல், முட்டாள்தனமான சர்வாதிகாரம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆளும் அரசு மீது உள்ளதே ஒழிய மகிந்த மீது இல்லை.

அதுதான் புதிர். மகிந்தவின் ஆட்சியில் நடைபெற்ற போக்குவரத்து பாதைகள் உருவாக்கம்,  உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சர்வதேச மாநாடுகள், கிராமிய அபிவிருத்தி திட்டங்கள், வேலைவாய்ப்புகள், எண்ணற்ற கண்காட்சிகள் என்று சகலவற்றினால் உருவான கவர்ச்சியும் மகிந்த மீதும், மக்ந்தவின் மூத்த மகன் நாமல் மீதும் சென்று சேர்ந்துகொள்ள இந்த ஆட்சி மேல் உள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மகிந்தவின் சகோதர் கோதபாய மீதும், எண்ணற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றொரு சகோதரர் மீது ஒட்டிக் கொண்டுள்ளது.

இதென்ன கதை, எல்லாம் ஒரே குடும்பம்தானே என்றாலும் மக்களது மனதில் இப்படித்தான் பதிந்துள்ளது.

'மகிந்த கிடைத்தற்கரிய ஒரு திறமைசாலி, அவர் எங்கள் பாக்கியம், ஆனால் அவருடன் உள்ளவர்களோ மோசமானவர்கள்.' இதுதான் மகிந்தவிற்கு போன தேர்தலில் வாக்களித்த பெரும்பான்மையானோரின் இன்றைய கருத்து.

மகிந்தவின் விளையாட்டுக்கள்
யுத்த வெற்றி நினைவு கூறல்
யுத்த வெற்றி நினைவு கூறல்

மகிந்தவின் விளையாட்டுக்கள்



ஆக இறுதியாக இவர்கள் மகிந்தவின் சுற்றம் சரியில்லை என மகிந்தவை கழற்றிவிடப் போகிறார்களா, இல்லை மகிந்த சுற்றத்தையும் மீறி நன்மை செய்வார் என்று நம்பி வாக்களிக்கப் போகிறாரா என்பதுதான் இப்போதைய ட்விஸ்ட்.

ஏனெனில் வாழ்நாளில் தலைநகருக்கு வரக்கூடிய வாய்ப்பே இல்லாத மிகவும் வசதி குறைந்த மக்கள் பலருக்கு இலங்கையின் பிரதான மண்டபங்களில் நடந்த கண்காட்சிகளை இலவச போக்குவரத்து வசதியோடு காணச்செய்த நபர் மகிந்த. அவர்களது மனநிலை 'சூது கவ்வும்' படத்துல சேகர் சொல்லுற வசனம் போலத்தான் இருக்கும்.
"எங்க பரம்பரையில எவனுமே காரை கழுவினது கூட கிடையாது. அப்டிப்பட்ட பரம்பரையில வந்து இப்டி ஒரு காரை ஓட்டி இருக்கேன்னா, அதுக்காக ஒரு வேலை இல்ல 100 வேலை கூட போகலாம்."
மகிந்த ஆதரவாளர்கள்


இப்படி நாடுமுழுவதும் அடித்தட்டு மக்களிடம் மிகச்செல்வாக்காகவே உள்ளார் மகிந்த. ஆட்சியில் இருக்க மக்களிற்கு கொடுக்க வேண்டியது Bread and circuses (or bread and games) (from Latin: panem et circenses) என்று சொல்லுவார்கள்.
பாண் விலை உயர்ந்தற்கு மகிந்ததான் காரணம் என்று அவர்களுக்கு தெரியாது. ஆனால் விளையாட்டுகள் அவர்களை மகிழ்ச்சிக்கடலில் எப்போதும் மூழ்கடித்தே வைத்திருந்தது.

'தயட்ட கிருல' 'தாருண்யட்ட ஹெட்ட' ' யுத்த வெற்றிவிழாக்கள் என்று நாடுமுழுதும் ஏதோ ஒரு விளையாட்டை எப்போதுமே காட்டிக்கொண்டிருந்தார். 

இப்படி ஒரு பலமான நிலையில் இருப்பவருக்கு எதிராக திரண்டிருக்கிறது அனைத்து கட்சிகளும். இன்னமும் ஒரு பொது வேட்பாளரை ஏகமனதாக அவர்களால் கூறமுடியவில்லை. பிழையான தெரிவால் இந்த வாய்ப்பை இழந்து விடுவோமோ என்று 5 க்கு மேற்பட்ட தெரிவுகளை வைத்துக் கொண்டு இழுபடு அளவிற்கு ஆளுமையான நபர் சிங்கள அரசியல்வாதிகளில் கூட இல்லை என்பதுதான் துரதிஷ்டமான நிலவரம்.

முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வில் ரணிலுக்கு அடுத்தபடியான தலைவர் கரு ஜெயசூர்யா
எதிர்க்கட்சித்தலைவர் ரணில்




ஏகமனதாக 4 கட்சிகளால் ஒருவரை தெரிய இவ்வளவு குழப்பமென்றால் பிறகு அவரை நாட்டுமக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்வதில் எத்தனை குழப்பம் வரும் என்பதை நினைத்தால் மகிந்த காட்டில் மழை போல்தான் தெரிகிறது.










No comments:

Post a Comment