Thursday, November 20, 2014

மறுபடியும் மகிந்தவா.........??????


தமிழர்களிற்கு இலங்கையின் அரசியல் ஊகிப்பதற்கு மிகக்கடினம். காரணம் தமிழ் ஊடகங்கள் சிங்கள மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதை வெளிப்படுத்துவதில்லை. சிங்களவர்களின் அரசியல் பார்வை, அபிவிருத்தி பற்றிய சிந்தனை என்று எதனையும் வெளியிடுவதில்லை.

மகிந்த
இலங்கையின் சிக்கலே இதுதான். வடக்கில் 'மோட்டுச் சிங்களவன்' என்று தமிழ் ஊடகங்களும், தெற்கில் 'கள்ளத் தமிழன்' எண்டு சிங்கள ஊடகங்களும் எப்போதும் எண்ணெய் ஊற்றிக் கொண்டே இருந்தால் என்றுதான் அவர்கள் மற்றவர்களது உண்மை மனோநிலையை புரிந்து கொள்வது.

அரசியல் விவாதங்களிலும் இதே நிலவரம்தான். தமிழருக்கு சிங்களம் வாசிக்க தெரியாது. சிங்களவர்களுக்கு தமிழே தெரியாது. முஸ்லீம்கள் இந்த விவகாரத்தில் சரியாக நிலவரங்களை கணிக்ககூடியவர்கள். ஆனால் முதலே கணித்து வெல்லக்கூடிய கட்சியோடு தங்களை இணைத்துக்கொள்வதுதான் துர்பாக்கியம்.

இரண்டு தடவை வென்ற மகிந்தவிற்கு மூன்றாம் தடவை வெல்வது மிக எளிதான விவகாரம். வரலாறு காணாத ஊழல் ஒருபுறம், நினைத்துக்கூட பார்க்கமுடியாத அடக்குமுறை, அடாவடி அரசியல், முட்டாள்தனமான சர்வாதிகாரம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆளும் அரசு மீது உள்ளதே ஒழிய மகிந்த மீது இல்லை.

அதுதான் புதிர். மகிந்தவின் ஆட்சியில் நடைபெற்ற போக்குவரத்து பாதைகள் உருவாக்கம்,  உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சர்வதேச மாநாடுகள், கிராமிய அபிவிருத்தி திட்டங்கள், வேலைவாய்ப்புகள், எண்ணற்ற கண்காட்சிகள் என்று சகலவற்றினால் உருவான கவர்ச்சியும் மகிந்த மீதும், மக்ந்தவின் மூத்த மகன் நாமல் மீதும் சென்று சேர்ந்துகொள்ள இந்த ஆட்சி மேல் உள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மகிந்தவின் சகோதர் கோதபாய மீதும், எண்ணற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றொரு சகோதரர் மீது ஒட்டிக் கொண்டுள்ளது.

இதென்ன கதை, எல்லாம் ஒரே குடும்பம்தானே என்றாலும் மக்களது மனதில் இப்படித்தான் பதிந்துள்ளது.

'மகிந்த கிடைத்தற்கரிய ஒரு திறமைசாலி, அவர் எங்கள் பாக்கியம், ஆனால் அவருடன் உள்ளவர்களோ மோசமானவர்கள்.' இதுதான் மகிந்தவிற்கு போன தேர்தலில் வாக்களித்த பெரும்பான்மையானோரின் இன்றைய கருத்து.

மகிந்தவின் விளையாட்டுக்கள்
யுத்த வெற்றி நினைவு கூறல்
யுத்த வெற்றி நினைவு கூறல்

மகிந்தவின் விளையாட்டுக்கள்



ஆக இறுதியாக இவர்கள் மகிந்தவின் சுற்றம் சரியில்லை என மகிந்தவை கழற்றிவிடப் போகிறார்களா, இல்லை மகிந்த சுற்றத்தையும் மீறி நன்மை செய்வார் என்று நம்பி வாக்களிக்கப் போகிறாரா என்பதுதான் இப்போதைய ட்விஸ்ட்.

ஏனெனில் வாழ்நாளில் தலைநகருக்கு வரக்கூடிய வாய்ப்பே இல்லாத மிகவும் வசதி குறைந்த மக்கள் பலருக்கு இலங்கையின் பிரதான மண்டபங்களில் நடந்த கண்காட்சிகளை இலவச போக்குவரத்து வசதியோடு காணச்செய்த நபர் மகிந்த. அவர்களது மனநிலை 'சூது கவ்வும்' படத்துல சேகர் சொல்லுற வசனம் போலத்தான் இருக்கும்.
"எங்க பரம்பரையில எவனுமே காரை கழுவினது கூட கிடையாது. அப்டிப்பட்ட பரம்பரையில வந்து இப்டி ஒரு காரை ஓட்டி இருக்கேன்னா, அதுக்காக ஒரு வேலை இல்ல 100 வேலை கூட போகலாம்."
மகிந்த ஆதரவாளர்கள்


இப்படி நாடுமுழுவதும் அடித்தட்டு மக்களிடம் மிகச்செல்வாக்காகவே உள்ளார் மகிந்த. ஆட்சியில் இருக்க மக்களிற்கு கொடுக்க வேண்டியது Bread and circuses (or bread and games) (from Latin: panem et circenses) என்று சொல்லுவார்கள்.
பாண் விலை உயர்ந்தற்கு மகிந்ததான் காரணம் என்று அவர்களுக்கு தெரியாது. ஆனால் விளையாட்டுகள் அவர்களை மகிழ்ச்சிக்கடலில் எப்போதும் மூழ்கடித்தே வைத்திருந்தது.

'தயட்ட கிருல' 'தாருண்யட்ட ஹெட்ட' ' யுத்த வெற்றிவிழாக்கள் என்று நாடுமுழுதும் ஏதோ ஒரு விளையாட்டை எப்போதுமே காட்டிக்கொண்டிருந்தார். 

இப்படி ஒரு பலமான நிலையில் இருப்பவருக்கு எதிராக திரண்டிருக்கிறது அனைத்து கட்சிகளும். இன்னமும் ஒரு பொது வேட்பாளரை ஏகமனதாக அவர்களால் கூறமுடியவில்லை. பிழையான தெரிவால் இந்த வாய்ப்பை இழந்து விடுவோமோ என்று 5 க்கு மேற்பட்ட தெரிவுகளை வைத்துக் கொண்டு இழுபடு அளவிற்கு ஆளுமையான நபர் சிங்கள அரசியல்வாதிகளில் கூட இல்லை என்பதுதான் துரதிஷ்டமான நிலவரம்.

முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வில் ரணிலுக்கு அடுத்தபடியான தலைவர் கரு ஜெயசூர்யா
எதிர்க்கட்சித்தலைவர் ரணில்




ஏகமனதாக 4 கட்சிகளால் ஒருவரை தெரிய இவ்வளவு குழப்பமென்றால் பிறகு அவரை நாட்டுமக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்வதில் எத்தனை குழப்பம் வரும் என்பதை நினைத்தால் மகிந்த காட்டில் மழை போல்தான் தெரிகிறது.










Thursday, November 6, 2014

Three Days (Korean TV series) - ஒரு தமிழ்நாட்டு அரசியல் கதை


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இன்றைக்கு இப்படியான ஒரு கண்ணோட்டத்தில பாக்குற அனுதாபிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

எப்படியென்றால் தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில செய்த தவறுகளை இன்று அவர் திருத்திக்கொண்டு பிராயச்சித்தம் தேடுகிறார். அதேவேளை ஆரம்ப காலம் தொட்டு அவரை சுற்றி இருந்து அவரை தவறு செய்ய தூண்டிய மாபியா இன்று தம்முடைய ஆதிக்கத்தில் இருந்து அவர் விடுபட்டு அந்த மாபியாவுக்கே எதிரா திரும்பின தருணங்களை தாங்க முடியாம அவரை விழுத்தியதாக கூறுகிறார்கள். அவர் மக்களுக்காக போராடுவதாகவும் கூறுகிறார்கள்.

அச்சொட்டா அதே கதைதான் இது. ஜெயலலிதாக்கு பதிலாக தென்கொரியாவின் ஜனாதிபதி.



அமெரிக்கன் 24 TV series  அதே போல நேரத்தை குறிப்பிட்டுச் செல்லுற ஒரு அரசியல் த்ரில்லர். மொத்தம் 3 பகுதி ஒவ்வொரு பகுதியும் 72 மணித்தியாலத்தை குறிக்கும். 16 எபிசோட்ல முடியுற தொடர். ஒவ்வொன்றும்  1 மணிநேரம்.


சர்வதேச ஆயுதவியாபாரம் எப்படி உண்மையாக நடைபெறுதோ அந்த அசிங்கத்தை அப்படியே காட்டி இருப்பர்கள். உயிர்காக்கும் மருந்து என்றாலும் சரி உயிரைகுடிக்கிற ஆயுதம் என்றாலும் சரி அமெரிக்கா ஒவ்வொரு நாட்டுலயும் விற்பதற்கு கையாளுற உத்தி ஒன்றுதான். நோயை உருவாக்கி மருந்தை விற்பது, சண்டையை உருவாக்கி ஆயுதத்தை விற்பது.

வடகொரிய கெரில்லாக்கு பணம் கொடுத்து தென்கொரியா மீது ஒரு சாதுவான தாக்குதல் முயற்சி போல காட்டி தென்கொரியாவை ஆயுதம் வாங்க நிர்ப்பந்திக்கும் படி யோசனை சொல்லுறார் அந்த நேரம் அமெரிக்க ஆயுத கம்பனி ஏஜண்ட்டா இருந்த லீ-டொங்-வீ. தாக்குதலின் தாக்கத்தை அதிகரிக்க அதை ஒரு பெரிய படுகொலையா நடத்தி எல்லாரையும் அதிர வைக்குறான்   சைக்கோ தென்கொரிய தொழிலதிபன் கிம்-டோ-ஜின்.

குற்றவுணர்வால பாதிக்கப்பட்ட லீ-டொங்-வீ  தான் பண்ணின தப்ப சரி பண்ண ஜனாதிபதியா வந்து தன்னோட சேர்ந்து சதி செய்த அத்தனை பேரையும் கூண்டேத்துறதுதான் கதை.

இந்த கதைதான் அடிப்படை. ஆனா தொடர் முழுக்க ஒன்மேன் ஆர்மியாக போராடி ஜெயிக்கிறது ஒரு நேர்மையான உளவுப்பிரிவு ஆசாமி ஹான்-டே-யுன். உதவிக்கு ஒரு உளவுப்படை பெண்ணும் ஒரு பொலிஸ் பெண்ணும்.

ஹான் - டே - யுன் கரெக்டர் எல்லாரும் பல படங்கள்ல பல காமிக்ஸ்கள்ல பார்த்த கரெக்டர்தான். ஓரளவுக்கு இரத்தபடலம் ஏஜெண்ட் XIII உடன் ஒப்பிடலாம்.



பெரிய பட்ஜெட்டில எடுத்திருக்கிறதால பிரமாண்டத்துக்கு பஞ்சமே இருக்காது. கொரியாவினுடைய அதீதமான திறந்த பொருளாதாரக் கொள்கையை படம் விமர்சிக்க தவறவில்லை. வில்லன் வரும்போது பின்னணில டெரரா எல்லாம் மியூசிக் போட்டு சாவடிக்காம அவன்ட செயல்பாட்டில அவன்ட மிருகத்தன்மையை காட்டி இருக்கிறது கொரிய சினிமா மட்டுமில்ல தொலைக்காட்சி தொடர்கள் கூட சரியான பாதையில பயணிக்கிறதை காட்டுது. 




ஒவ்வொரு அதிகாரிகளினது வாழ்க்கை பூரா கட்டிகாப்பாத்தின நேர்மை ஒரு தவறான முடிவோட கேள்விக்குறியாறது மட்டுமில்லாது காலம் முழுக்க பயந்து நடுங்கி மீள முடியாத ஊழல் வளையத்தில சிக்கவேண்டி இருக்கிறதை இதில வடிவா பார்க்கலாம்.

செத்தா எப்படி செத்தான் என்றும் சொல்லமாட்டார்கள், சமயத்தில உடலையும் கொடுக்க மாட்டார்கள், உயரதிகாரிகளை காப்பாற்ற துரோகிப்பட்டமும் திடீரென கிடைக்கும், நேற்றுமட்டும் உற்ற நண்பனா சக ஊழியனா இருந்தவனை இன்று கொல்லவேண்டிய பணி கிடைக்கும். இப்படிப்பட்ட நரகசீவியத்தை உளவு அதிகாரிகள் எப்படி வாழ்கிறார்கள் என்று இந்த தொடர்ல காணலாம். 


சிக்கல் என்னவென்றால் பார்க்கதொடங்கும் முன் 16 மணித்தியாலத்தையும் ஒதுக்கி வைத்துக்கொண்டு சாப்பாடு , டீ/காபி எல்லாம் தயாரா வைச்சுட்டு பார்க்க வேண்டும். எபிசோடுக்கு ஒரு ட்விஸ்ட் நிச்சயம் வரும். ஊகிக்கமுடியாத திரைக்கதை. வெறும் 16 மணித்தியால தொடருக்கு திரைக்கதை எழுத கிம்- யுன்- ஈ க்கு 2 வருடத்திற்கு மேல் தேவைப்பட்டிருக்கு என்பதில் இருந்து இதற்கு பின்னணியில் உள்ள உழைப்பை புரிந்து கொள்ளலாம்.